சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அரசு மருத்துவர்கள் நோயாளிகளைக் கண்டு கொள்வதில்லை என வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு கால் வலி காரணமாக சிகிச்சைக்காக இன்று காலை 7 மணிக்கு வந்தார். அப்போது, மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுடன் சேர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக கஞ்சா கருப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “அரசு மருத்துவர்கள் 2.5 லட்சம் ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தனியாக கிளினிக் அமைத்துக் கொண்டு அங்குச் சிகிச்சை அளிக்கின்றனர். அதனால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது பற்றி மருத்துவத்துறை அமைச்சர் பேச வேண்டுமா?. இல்லையா?. இன்றைக்கு அதற்காகப் போராட்டம் செய்யப் போகிறோம். வெறி நாய் கடித்து ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மண்டை உடைந்து மாணவர்கள் ஒருவர் அமர்ந்துள்ளார்” என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.