• Wed. Mar 19th, 2025

தடம் புரண்டு சாலைக்கு வந்த சரக்கு ரயில்..!

Byவிஷா

Oct 4, 2023

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்ததால், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்நிகழ்வு அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில்  மோட்டார்களுக்கு பயன்படுத்தும் ரோல் காயில் ஏற்றிக்கொண்டு 60 பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில் நேற்று மாலை 6 மணிக்கு   2வது பிளாட்பார்ம் ரயில் பாதை வழியாக காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திற்கு வந்தது. அதேசமயம், எதிர் மார்க்கத்தில் முதல் பிளாட்பாரம் ரயில் பாதை வழியாக சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வந்த சரக்கு ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நிற்காமல்   தண்டவாளம் முடிந்த பகுதியை கடந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 20 மீ தொலைவுக்கு வந்து சாலைக்கு வந்து விட்டது.   இதன் காரணமாக, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தன. அந்த ரயில் பாதை பயன்பாடு இல்லாத பகுதி. இதனால்  அருகில் இருந்த ஒரு மரத்தில்   மோதி நின்றது.
அதே நேரத்தில் அப்பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.  இச்சம்பவம் குறித்து   ரயில்வே போலீசார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகள் 4 மணி நேரம் நடைபெறும் என்பதால், ரயில்வே கேட் மூடப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.