நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை ஜூன் 22ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜய், சென்டிமெண்டாக தனது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மதுரையில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த முடிவு செய்திருக்கிறாராம். தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் தன்னுடைய பிறந்தநாளின் போதே சென்டிமென்ட்டாக கட்சியின் முதல் மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கிறார் விஜய். இதுகுறித்தான அறிவிப்பும் சீக்கிரம் வரும் என்கிறார்கள்.
பல அரசியல் தலைவர்களுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த மதுரை மாவட்டம் தன்னுடைய அரசியல் பயணத்திற்கும் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று கருதியிருக்கிறார் விஜய். படவிழாக்களில் விஜயின் குட்டி ஸ்டோரிக்கே அவரது ரசிகர்கள் தவமாய் காத்திருப்பார்கள். இப்போது அரசியல் களத்தில் தங்கள் தலைவரின் முதல் மாநாடு எப்படி இருக்கப் போகிறது, அதில் அவர் என்ன பேசப் போகிறார் என்று தங்கள் ஆவலை இப்போதே இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.