• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது- இபிஎஸ் அறிக்கை

ByA.Tamilselvan

Oct 12, 2022

தமிழகத்தில் ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் …. தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்பரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,390 ரவுடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் என்ற செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோல் பல காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறும். இப்படி ஆப்பரேஷன் மின்னல் பற்றியும், இதன் காரணமாக ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும் போதே, சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி.யின் பூர்வீக வீட்டில் திங்கட்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், சி.சி.டி.வி. கேமரா, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்று நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. பணியில் உள்ள ஒரு ஐ.ஜி-யின் வீட்டிற்குள் ஆப்பரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரவுடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும். அதை விடுத்து, தி.மு.க. அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக்கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா என்பதற்கு சரியான விளக்கமில்லை. இவர்களை சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும், இனியாவது சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்த தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.