தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருபவர் மல்லையன் இவர் தொழில் தொடங்க கடன் தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர் மூலம் வேலூரைச் சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் லோன் பெற்று தருவதாக கூறி மல்லையனின் ஆதார், பான், போட்டோ உள்ளிட்டவை பெற்றுக்கொண்டு பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கிக்கு அழைத்து சென்று கடந்த ஆண்டு மல்லையன் பெயரில் புதிய சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.
மேலும் கடன் பெறுவதற்காக கரண்ட் அக்கவுண்ட் தேவை எனக் கூறி சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வங்கியில் மல்லையன் பெயரில் கரண்ட் அக்கௌன்ட் ஒன்றை துவங்கியுள்ளார். வங்கி பாஸ்புக், ஏடிஎம் கார்டு ஆகியவை தபால் மூலம் வீட்டிற்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் மூன்று மாதங்கள கடந்த நிலையில் வங்கி ஏடிஎம், பாஸ்புக் தனக்கு வழங்காதது குறித்து பெரியகுளத்தில் உள்ள வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது மல்லையனின் வங்கிக் கணக்கில் வேறு ஒரு செல்போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மன்சூர் அலி கானிடம் கேட்டபோது தனக்கு விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தான் நேரில் வந்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மல்லையனிடம் அவ்வப்போது கடன் பெறுவதற்கு ஓடிபி (otp) வேண்டும் என கூறி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மல்லையனின் வீட்டுக்கு M.M ட்ரேடர்ஸ் என்ற பெயரில் ஜிஎஸ்டி நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது இது குறித்து மன்சூர் அலிகானிடம் கேட்டபோது அது ஒன்றும் இல்லை நான் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து கடன் கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் மல்லையன் பணிக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு செல்போனில் ஸ்கேன் செய்தபோது பணம் வரவில்லை.
இதனை அடுத்து தனது பேலன்ஸை பார்த்தபோது 22,90,900 லட்சம்(23 லட்சம்) ரூபாய் மைனஸில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மல்லையன் வங்கிக்குச் சென்று கேட்டுள்ளார்.
அப்போது மல்லையன் வங்கி மற்றும் பான் கார்டில் M.M டிரேடர்ஸ் என்ற பெயரில் வரவு செலவு நடைபெற்றுள்ளது. அதற்கு ஜிஎஸ்டி வரி 23 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மல்லையன், மன்சூர் அலி கானிடம் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து இது குறித்து தேனி வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மல்லையன் புகார் தெரிவித்துள்ளார்.
வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி பான் கார்டு, ஆதார், ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று தன் பெயரில் தனக்குத் தெரியாமல் நிறுவனத்தை துவங்கி அதற்கு ஜிஎஸ்டி பெற்று 10 கோடி வரையில் வரவு செலவு நடத்தி அதற்கான வரி 23 லட்சம் ரூபாய் தனது வங்கியில் பாக்கி வைத்து இருப்பதாக பாதிக்கப்பட்ட மல்லையன் தெரிவித்தார்.
தன்னை ஏமாற்றிய மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது வங்கியில் உள்ள ஜிஎஸ்டி வரியினை சரி செய்து தர வேண்டும் என வருமானவரித்துறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.