காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளியில் 1988-1989 -ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நெடுங்காட்டிலுள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. பள்ளிப் பருவத்தை நினைவு கூறும் வகையிலும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஏராளமான முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளிப் பருவத்தில் தாங்கள் சுவைத்த தின்பண்டங்களான குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, புளிப்பு மிட்டாய், பொரி உருண்டை, எலந்த வடை, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களான கோலி, பம்பரம், தாயக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து தங்களது ஆசிரியர்களுக்கு சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 88 89 ஆம் ஆண்டுகளில் அப்பள்ளியில் பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை வாழ்த்தினார். ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்தும் பல்வேறு பரிசுகளை வழங்கியும் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் மாணவர்களின் பங்களிப்பில் ஜவஹர்லால் நேரு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு வேலைகள் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.