• Wed. Feb 12th, 2025

விவசாயிகளின் குறைகளைக் கேட்க மறந்து.., செல்போனில் மயங்கிய மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர்..!

Byவிஷா

Jul 7, 2023

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளின் குறைகளைக் கேட்க மறந்து மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் செல்போனில் மூழ்கிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம்.
அதேபோல் (ஜூலை 04) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் விதை மணிலாவுடன் இடு பொருட்கள் 1550 ரூபாய் கொடுத்து வாங்கினால் மட்டுமே கிடைக்கும் என்று அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் குறை கூறிக் கொண்டிருந்தனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நெடுநேரமாக செல்போனில் பேசியபடி இருந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், குறைகளைக் கேட்க வேண்டிய அதிகாரியே இது போன்று விவசாயிகளை அலட்சியப்படுத்துவது வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் காது கொடுத்து கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.