• Mon. May 6th, 2024

தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பை தொடர்ந்து.., மளிகைப் பொருட்களின் விலை உயர்வு..!

Byவிஷா

Jul 3, 2023

தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பருப்பு உள்பட மளிகை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப நாட்களாக ‘அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைவாக இருப்பதால், மளிகை பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 10 நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து வந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தக்காளி, இஞ்சி உள்பட பெரும்பாலான காய்கறிக்ள வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்து வந்த நிலையில், இஞ்சி விலையும் ரூ.250 வரை விற்பனையாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்து தற்போது கிலோ ரூ.90 முதல் 100 வரையும், சின்ன வெங்காயம் விலை ரூ.80 ஆகவும், பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் 120 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி விலை கிலோவுக்கு ரூ.200 என்ற நிலையில் உள்ளது.
இந்த விலையேற்றத்தையே மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், தற்போது அரிசி உள்பட மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை கிலோ ரூ.100 என விற்பனை செய்யப்பட்ட பூண்டு விலை ரூ.130 ஆக அதிகரித்து உள்ளது. இதுமட்டுமின்றி, மக்களின் முக்கிய தேவையான, சீரகத்தின் விலை கிலோ 365 ரூபாயில் இருந்து 540 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அத்துடன், மிளகு கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேவேளையில் 130 ரூபாயாக இருந்த பாமாயில் விலை படிப்படியாக குறைந்து தற்போது 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
துவரம் பருப்பு விலை ரூ.80 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ துவரம் பருப்பு 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, அரிசி விலையும் கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு 900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ எடை கொண்ட சாதா பொன்னி அரிசி மூட்டை, தற்போது ஆயிரத்து 50 ரூபாயாகவும், நடுத்தர பொன்னி அரிசி ஆயிரத்து 250ல் இருந்து ஆயிரத்து 500ஆகவும் அதிகரித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட பச்சரிசி மூட்டையும் ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட பெரும்பாலான மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால், வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விலை உயர்வு குடும்பத்தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *