• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சங்கரநாராயணசாமி கோவிலில் கொடியேற்றம்..,

ByV. Ramachandran

Jul 28, 2025

சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா நேற்று கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் 4.42 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு,வி.எம் ராஜலட்சுமி, தொழிலதிபர்கள் கனகவேல், ராமகிருஷ்ணன், சங்கர சுப்பிரமணியன், சுந்தர், குமரன், சங்கரன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேஷ் கண்ணா, முதல்வர் பழனி செல்வம், பாஜக மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளன்று ஆகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11 ம் திருநாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.