தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ளது நடுவிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது நொச்சிகுளம். இந்த குளத்தில் உள்ள நீரைக் கொண்டு தான் இங்குள்ள சிறு குறு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.
இந்த நொச்சி குளம் சுமார் 5.84 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில், கல்லணை கால்வாயின் மூலம் தண்ணீரை கொண்டு நிரப்பி இதன் மூலம் சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில் குளத்திற்கு வரக்கூடிய நீர்வழிப்பாதைகள் தூர்த்து போனதால், குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இதனால் அப்பகுதியை சேர்ந்த தனிநபர்கள் குளத்தை ஆக்கிரமித்து, மண் போட்டு மூடி தென்னை சாகுபடி செய்து வருகிறார்கள் என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குளம் காணாமல் போனதால் குளத்தை நம்பியிருந்த சிறு, குறு விவசாயிகளின் நிலங்களுக்கு தண்ணீர் இன்றி தரிசு நிலங்களாக போட்டுவிட்டனர். பலர் நிலங்களை விற்றுவிட்டு தற்போது வருவாய் ஏதுமில்லாமல் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஊருக்கு ஆதாரமாக விளங்கிய குளத்தை மீட்கக் கோரி நடுவிக்கோட்டை கிராம மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு குளத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.