விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி கண்ணா நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டியில் தீக்குச்சிகளை உரசி பற்ற வைத்து எரிய வைக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 10- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், தீப்பெட்டி அட்டையில் ஸ்கிரீன் பிரிண்டிங் பணி நடந்து கொண்டிருந்தபோது மூலப் பொருளான சிவப்பு பாஸ்பரஸ் டின் கீழே சரிந்து விழுந்ததில் மூலப் பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பணியிலிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பற்றி எரிந்த தீ சிவப்பு பாஸ்பரஸ் மற்றும் தின்னர் ஆகிய மூலப்பொருள்களில் பரவி மளமள வென எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.