• Fri. Oct 30th, 2026

கோவையில் விஸ்வநாதன் என்பவரின் மாட்டைப் போராடி மீட்ட தீயணைப்புத் துறை!

BySeenu

Oct 30, 2026

கோவை, சங்கனூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடைப் பள்ளத்தில் தவறி விழுந்து, கடந்த மூன்று நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி உயிருக்குப் போராடி வந்த மாடு ஒன்றை, கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடிப் பத்திரமாக மீட்டு உள்ளனர்.

கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்குச் சொந்தமான மாடு ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் திடீரென மாயமானது.

​உரிமையாளர் பல்வேறு இடங்களில் தேடியும் மாடு கிடைக்காத நிலையில், அது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைப் (Underground Drainage) பள்ளத்திற்குள் தவறி விழுந்து உள்ளது தெரியவந்தது. ஆழமான பள்ளம் மற்றும் கழிவுநீர் நிறைந்த பகுதி என்பதால், மாடால் தானாக மேலே வர முடியாமல், கடந்த 3 நாட்களாகப் பசியிலும் தாகத்திலும் உயிருக்குப் போராடி வந்து உள்ளது.
​
இந்நிலையில், அந்த வழியாகச் சென்ற அப்பகுதி பொதுமக்கள் சிலர், பாதாள சாக்கடைப் பள்ளத்திற்குள் மாடு ஒன்று பலவீனமான நிலையில் தவித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளனர். உடனடியாக இது குறித்து மாட்டின் உரிமையாளர் விஸ்வநாதனுக்கும், கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் பாதாள சாக்கடைப் பகுதிக்குள் இறங்கினர். கழிவுநீர் மற்றும் சேறு நிறைந்த பகுதியில் மாட்டைப் கவனமாகப் பிணைத்து, நீண்ட நேரம் போராடிப் காயங்கள் இன்றிப் பத்திரமாகக் மேலே கொண்டு வந்து மீட்டனர்.
​
3 நாட்களாகப் பாதாள சாக்கடைக்குள் உயிருக்குப் போராடிய மாடு, தீயணைப்பு வீரர்களின் திறம்பட நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்ட உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்து மீட்புக் குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

​அதேவேளையில், சங்கனூர் பகுதியில் திறந்தவெளியாக ஆபத்தான முறையில் காணப்படும் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களை உடனடியாக மூடி, விபத்துகளைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.