சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதிக புகை இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆனால் உள்ளே எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. தீ விபத்து நடந்த கீழ்த் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு அதிக அளவில் புகைமூட்டம் செல்கிறது.. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.