• Thu. Apr 25th, 2024

“சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!

Byதன பாலன்

Mar 22, 2023

புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’.

அறிமுக இயக்குநரான துரைமுருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜே.கே.சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானாபாலா பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.கே.சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானாபாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.வரும் ஏப்ரல் 7-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.இந்நிகழ்வில் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை ஷனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் கவிஞர் மதுரா, வழக்கறிஞர் மோகன், புலமைப்பித்தனின் உதவியாளரான குணசேகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.மறைந்த கவிஞர் புலவர் புலமைப்பித்தனின் மனைவியும், ‘எவன்’ படத்தின் தயாரிப்பாளருமான திருமதி தமிழரசி புலமைப்பித்தனும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகை ஷனம் ஷெட்டி பேசுகையில், ”மறைந்த கவிஞர், புலவர் புலமைப்பித்தன் எழுதிய ‘தென்பாண்டி சீமையிலே..’ எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.‌ அந்த பாடலைக் கேட்கும்போது மனதில் எழும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. ஐயாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது. ஆனால் அவருடைய ஆசீர்வாதம் இந்த அரங்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இருக்கிறது.அவருடைய பேரன் நடித்திருக்கும் ‘எவன்’ திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சின்ன படம்.. பெரிய படம்.. என்ற வித்தியாசம் ரசிகர்களுக்கு தெரியாது. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் அனைவரும் ஆதரவு தருவார்கள். புதுமுக கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவளிக்க வேண்டும்.

தமிழ் எனக்கு பிடித்த மொழி. எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் தமிழில் பேசுவதற்கு பயிற்சி எடுக்கிறேன். தமிழில் பேசுவதற்கும் விரும்புகிறேன்.இந்தப் படத்தில் எந்த விஷயத்தை புதிதாக சொல்ல வருகிறீர்கள் என கேட்டபோது நாயகன் ஒரு கின்னஸ் சாதனையாளர் என படக் குழுவினர் விவரித்தனர். அதைக் கேட்டவுடன் வியந்து போனேன். படத்தில் இடம் பெறும் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் அவரே கடினமாக உழைத்து நடித்திருக்கிறார்.நடிப்பதற்காக பயிற்சியும், படத்தை இயக்குவதற்காக லண்டனில் பயிற்சியும் பெற்றிருக்கிறார் என கேட்டபோது, ஆச்சரியப்பட்டு பாராட்டினேன். சக நடிகையாக அவரது இந்த கடினம் முயற்சி எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அவருடைய கடின உழைப்பு நிச்சயம் வெற்றியை தரும்.

திரைப்படத் துறையில் பணியாற்றும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் கலைஞர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. ஆபத்து என தெரிந்தும், துணிந்து சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பணி பாதுகாப்பு குறித்த காப்பீடுகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.ஏப்ரல் ஏழாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘எவன்’ திரைப்படத்தை கண்டு ரசித்து இளம் நாயகன் திலீபனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *