சென்னை ஆலந்தூர் காவலராக பணியாற்றிய சாம் செல்லையா ஜெயகுமார் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வந்தது.

சாம் செல்லையா ஜெயகுமார், சென்னை கே.கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்தவர். அவருடைய திடீர் மறைவு குடும்பத்தினருக்கு நேர்ந்த பொருளாதார இழப்பை சரிசெய்யும் நோக்கில், அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் “உதவும் கரங்கள்” எனப்படும் அமைப்பின் மூலம் தமிழகமெங்கும் உள்ள காவலர்களிடம் நிதி திரட்டினர்.
இதன் மூலம் மொத்தம் 27 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் திரட்டப்பட்டது. இதில் 26 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் தொகை, அவருடைய குடும்பத்தினர் பெயரில் காப்பீட்டுத் தொகையாக செலுத்தப்பட்டதுடன், அவரது தாயாருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இதற்கு முன்பும் இதே அமைப்பின் மூலம் உயிரிழந்த 87 காவலர்களின் குடும்பங்களுக்கு காவல்துறை சக ஊழியர்கள் உதவி செய்து வந்துள்ளனர்.
சாம் செல்லையா ஜெயகுமாரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இந்த பெரும் நிதியுதவி, காவல்துறை ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.





