

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா (41). கூலி வேலை பார்த்து வருகிறார். குருவையாவின் தந்தை லட்சுமணப்பெருமாள் விவசாய வேலை பார்த்து வந்தார். லட்சுமணப்பெருமாளிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு குருவையா அடிக்கடி தகராறு செய்து வந்தார். சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இருந்த தந்தை மீது குருவையா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், மாரியம்மன் கோவில் அருகே உட்கார்ந்திருந்த லட்சுமணப்பெருமாளை, குருவையா அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர். சம்பவம் குறித்த வழக்கு, திருவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜரா ஆர்ஜிஜி, தந்தையை வெட்டி படுகொலை செய்த மகன் குருவையாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
