• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நெல்மணிகள் கொள்முதல் செய்யாததால் தேக்கமடைந்து உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகளுடன் விரோத போக்கை கையாண்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போய் இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து வந்தனர்.

இந்நிலையில் செண்பகராமன் புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து பெற்ற நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் ஆங்காங்கே கொட்டி வைத்திருந்தால் திடீரென்று பெய்த மழையால் நெல்மணிகள் மழையில் அடித்து செல்லப்பட்டு விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கண் கலங்க வைத்தது.

ஆனால் அருகில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானங்களை மிகவும் பாதுகாப்பாக பெரிய காங்கிரிட் குடோன்கள் கட்டி பாதுகாத்து வைத்திருக்கும் நிலையில் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தரையில் கொட்டி வைக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும் அழிந்து போவதை சுட்டிக்காட்டி நெல் மணிகளை பாதுகாக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் செண்பகராமன் புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான குடோனை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று செண்பகராமன் புதூர் டாஸ்மாக் மதுபானக் குடோன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அரசியல் சார்பற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாய பிரதிநிதிகள் மற்றும் பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் சஹகார் பாரதி அமைப்பின் தலைவர் சகாயம் மற்றும் நிர்வாகிகள், ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினர்.

மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்ததை பட்டியல் இட்டு பேசினர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கூட நடத்துவதற்கு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்ட நிலையையும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத விவகாரங்களையும் பட்டியலிட்டு பேசினர்.

ஏற்கனவே விவசாயிகள் மாநாடு அகில இந்திய அளவில் டெல்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு குமரி மாவட்ட ஆட்சியரின் தகுதியற்ற போக்கை வன்மையாக கண்டித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதையும் அது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதையும் சுட்டிக்காட்டி குமரி மாவட்டத்திற்கு தகுதியற்ற மாவட்ட ஆட்சியராக அழகு மீனா இருப்பதை சுட்டிக்காட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராட்ட முடிவில் விவசாயிகள் தங்கள் தலையில் நெல்லை வாரி போட்டு ஒப்பாரி வைத்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. மேலும் போராட்டத்தில் நெல் முளைவிட்ட காட்சிகளையும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளையும் கண்ட விவசாயி ஒருவர் மயங்கி கீழே விழுந்ததும் பெண்கள் பலர் முளைவிட்ட நெல் மணிகள் மற்றும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மண்ணோடு மண்ணாகிப் போன நெல்மணிகளை பார்த்து கண்கலங்கியது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும் இதுவரையும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது அலுவலக அறைக்குள் மார்ச் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏற்கனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் கனிமவள கடத்தல் தொடர்பான சுமார் பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த மாவட்ட ஆட்சியர் மீது ஒரு சில அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை மாற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்து இருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியை தெரிவித்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளது தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அது தமிழக அரசியலிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதால் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்திய நிலையில் தற்போது குமரி மாவட்ட ஆட்சியரின் மோசமான செயல்பாட்டால் தொடர்ந்து விவசாயிகள் விரோத போக்கை கையாண்டு வரும் ஆட்சியரால் ஏற்படும் தொடர் அவ பெயர் வரலாற்றின் முக்கிய பக்கங்களாக அரசுக்கு எதிராக பதிவாகிவிடும் என்பதுதான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.