தஞ்சாவூர் மாவட்டத்தில், 289 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, குறுவை நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்துக்கொண்டு உள்ளனர். மேலும், ஒரத்தநாடு புதுாரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய வசதி இல்லாத நிலையில், சாலையில் சுமார் இரண்டு கி.மீ., துாரத்திற்கு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.

மேலும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில், 300 முதல் 500 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கியுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும். லாரி இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்ய வேண்டும். மழை பெய்யும் நிலையில், ஈரப்பதம் காரணம் காட்டாமல் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை தென்னமநாடு, கண்ணந்தங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரத்தநாடு – தஞ்சாவூர் சாலையில், தென்னமநாடு பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விவசாயிகளை கண்டுக்கொள்ளவில்லை என்றால் சங்கு தான் ஊத வேண்டும் என கூறி, சங்கு ஊதி விவசாயிகள் கோஷமிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் பேச்சுவாரத்தை நடத்தியதின் பேரில், மறியலை கைவிட்டு கலைந்துக்கொண்டனர். இதனால், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. இதை போல, நெடுவாக்கோட்டை விவசாயிகள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பூவத்துார் கிராமத்தில், நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க , பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஏற்பாடு செய்தனர். நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். ஆனால், அமைக்கப்படும் கொள்முதல் நிலையத்தின் அருகே உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நடைபெற்று வரும் சூழலில், நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதால், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் குருமன்தெரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஒரத்தநாடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு, நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் பூவத்தூர் கிராமத்தில் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் அப்பொழுது ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி இருப்பதால் அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் மேலும் சுமார் 150 குழி இடம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தேவைப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்து விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தின் பேரில், மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.