புதுச்சேரி அடுத்த சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணசாமி,59 வயதான இவர் புதுச்சேரி 45 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்ப தேவைகளுக்காக 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அதில் 18 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் வட்டியுடன் சேர்ந்து 14லட்ச ரூபாய் பெரியண்ணசாமி செலுத்த வேண்டும். இதில் 10 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில் மீதமுள்ள 4 லட்சம் ரூபாயை தவணை தேதியில் கட்டாமல் காலம் கடந்து செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் ஊழியர் முருகன் ஆகிய இருவரும் பெரியண்ணசாமி வீட்டின் முன்பு அமர்ந்து கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெரியண்ணசாமி கடந்த 15 தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் பெரியண்ணசாமியின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் ஜெயச்சந்திரன் ஊழியர் முருகன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டும், இறந்த பெரியண்ணசாமி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்து பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் நிதி நிறுவனம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.