பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட கூடுதல் தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால், பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தினமும் கோவிலுக்கு 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பம்பையில் புனித நீராட அனுமதி நிறுத்தப்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்ததால், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல பம்பை ஆற்றில் பக்தர்கள் பலி தர்ப்பணம் கொடுக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.