• Fri. May 3rd, 2024

தமிழக – கேரளா எல்லையில் கண்காணிப்பு குழு சோதனை நீட்டிப்பு

Byவிஷா

Apr 22, 2024

கேரளாவில் வருகிற 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையை நீட்டித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வாக்குப் பதிவு ( ஏப்.19 ) முடிந்த நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளா, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலங்களை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வரும் 26-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரளா மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையாறு மற்றும் கோபாலபுரம் ஆகிய இரண்டு சோதனைச்சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடுவர் என கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *