• Sat. May 4th, 2024

வாக்காளர்கள் நீக்கம் : மறுவாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

Byவிஷா

Apr 22, 2024

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தேர்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள் தான். தமிழக அரசு அதிகாரிகள் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கோவை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பேதிட்டமிட்டு, தங்களுக்கு வேண்டியஅதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்களாக திமுக நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை.
திமுகவினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள், மற்றும் குறிப்பிட்டசமுதாய மக்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள். பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
ஜனநாயகத்தின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தேர்தலை நேர்மையான முறையில் எதிர்கொள்வார்கள். ஆனால், மக்களின் மீது நம்பிக்கை அற்றவர்கள்தான் குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பார்கள். அதைத்தான் திமுக செய்திருக்கிறது. அதனால் தான் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ள தொகுதிகளில் கடைசி நேரத்தில் வாக்காளர்களை கொத்துக்கொத்தாக நீக்கி இருக்கிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப் பட்டார்களோ அங்கெல்லாம் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *