• Sat. May 11th, 2024

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பொருள்கள் கண்காட்சி..!

ByG.Suresh

Nov 25, 2023
உலகப் பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை ரசித்தனர்.

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய தொன்மைப் பொருள்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவர் மற்றும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வரவேற்றார். இக்கண்காட்சியில்
600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படடிருந்தது. இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பெற்ற பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன் பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களுடன்

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் பீர் முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன் மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி,வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப்பட்டன
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் கா.காளிராசா மற்றும் சிவகங்கை மன்னர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் ஏராளமான மாணாக்கர்கள் தொன்மைப் பொருள்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *