கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் பட்டபகலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை முளகுமூடு பகுதியில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து அரிவாள் மற்றும் உருட்டு கட்டையுடன் வெளியே வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அந்த வாலிபரை பட்டபகலில் அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் சரமாரி தாக்கினர். மேலும், அரிவாளால் அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி, வாலிபர் தாக்குதலை தடுத்து தப்பியோட முயன்ற போதும் அந்த கும்பல் தொடர் தாக்குதல் நடத்தியது.
இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் கூட தொடங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தக்கலை போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த வாலிபரும் தாக்குதல் நடத்திய கும்பலும் அங்கிருந்து தப்பியோடியது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தாக்கியவர்கள் யார்? தாக்குதலுக்கு உள்ளான நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வாலிபரை மர்ம கும்பல் அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.