• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைகை அணையில் இருந்து ஆறாவது நாளாக உபரி நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தினால், வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து ஆறாவது நாளாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, மேகமலை, கம்பம் பள்ளத்தாக்கு ,கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து, விடாமல் மழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டகுடி ஆற்றில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து குன்னூர் அருகே அம்மச்சியாபுரத்தில் முக்கூடலாக சங்கமமாகி, வைகை அணையின் நீர்தேக்க பகுதிக்கு வந்து அடைகிறது.

இதனால் கடந்த 13ம் தேதி 71 அடி உயரமுள்ள அணை நீர்மட்டம் 69 அடி ஆனதும், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் விநாடிக்கு ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 4420 கன அடி நீர் உபரியாக ஆற்றின் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் அணையின் முன் பகுதியில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. அதே சமயம் 58 கிராம கால்வாய் திட்டத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆற்றின் வழியாக திறந்துவிடப்பட்ட நீரின் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து முழுவீச்சில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.