• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளி வைக்க தேர்வு வாரியம் ஆலோசனை

Byவிஷா

Sep 24, 2025

உயர்நீதிமன்ற அறிவுரையின்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பெறப்பட்டன. முதலில் தேர்வு செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 தேர்வு நடைபெறுவதால் தேர்வு தேதி அக். 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயாராக 3 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் சிலர் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்தச் சூழலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கூட்டரங்கில் நடந்தது.
அதில், தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது உயர் நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று தேர்வு தேதியை தள்ளிவைக்கலாமா என விவாதிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சரும் தேர்வு தேதியை தள்ளிவைக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.