• Thu. Sep 28th, 2023

மாங்கல்ய பலம் தரும் நித்திய சுமங்கலி மாரியம்மன்..!

Byவிஷா

Jul 21, 2023

சக்தி வழிபாட்டிலே அக்னி சொரூபமாக விளங்குபவள் அகிலத்தை நோய் நொடியில் இருந்து காக்கும் அன்னை “மகா மாரியம்மன்” ஆவாள். மாரி வழிபாடு தமிழர்களின் பழைமையான வழிபாடு ஆகும். மாரியம்மன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரிலே கிராம தேவதையாக அருளாட்சி நடத்தி மக்களை வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து காத்து வருகிறாள்.
கொங்கு மண்டலமான நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் என்ற ஊரிலே நித்திய சுமங்கலி மாரியம்மன் என்ற பெயரிலே அருளாட்சி புரிந்து வருகிறாள். மற்ற கோவிலை விட இந்த கோவிலுக்கே உரிய தனிச் சிறப்புகள் உள்ளன.


நித்திய சுமங்கலி மாரியம்மன் வரலாறு:
கடையெழு வள்ளல்களில் ஒருவரான “வல்வில் ஓரி” கொல்லி மலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அந்த காலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்தின் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக் கொண்டது. என்னவென்று தோண்டி பார்த்தபோது பீடம் ஒன்று கிடைத்தது. வெளியே எடுத்தவுடன் தான் மாரியம்மன் எனவும் அவளுக்கு அங்கேயே கோயில் அமைத்து வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அசரீரி ஒலித்தது. அங்கேயே ஊர் மக்கள் சிறு குடில் அமைத்து வழிபட்டனர்.
பின்பு அந்நாட்டு மன்னன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தான். இதனால் மனம் வருந்திய அரசி வேதனைப்பட்டாள். இக்கோயிலுக்கு வந்து அம்மனை அழுது மன்றாடி தன் கணவனின் உயிரை மீட்டு தருமாறு தன் தாலிக்கொடியை கையிலேந்தி வேண்டிக் கொண்டு அங்கேயே அழுது மயங்கினாள். இதனை கண்டு மனமிறங்கி இந்த மாரியம்மனும் அவள் கணவனின் உயிரை மீட்டு அருள் பாலித்தாள்.

இதனால் இன்புற்ற அரசி பெண்களுக்கு தாலி வரமருளும் நித்திய சுமங்கலி அம்மன் என போற்றினால் அதுவே அவளின் திருநாமம் ஆனது. வல்வில் ஓரி காலத்தில் இக்கோயில் கட்டபட்டது என தல வரலாறு கூறுகிறது.

திருக்கோவிலின் சிறப்பம்சம்;
மற்ற மாரியம்மன் கோவிலுக்கும் இந்த கோவில் நடைமுறைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாவின் போது மட்டும் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு அதனை சிவனாக பாவித்து திருகல்யாணம் நடத்தி திருவிழா நடத்துகின்றனர். ஆடி பண்டிகை முடிந்ததும் கம்பம் அகற்றப்பட்டு நீர்நிலைகளில் சேர்க்கப்படும்.


ஆனால், இந்த திருகோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். கணவனை (சிவன்) விட்டு நீங்காத அம்பிகை அதனால் தான் “நித்திய சுமங்கலி மாரியம்மன் “ என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள். திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3-ஆம் நாள் வேப்ப மர கம்பம் மாற்றப்படும். அன்றைய தினம் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு தயிர் சாத பிரசாதம் வழங்கப்படும். இதனை பெற்று உண்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்து வருகின்றது.
திருவிழாவில் அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அக்னி சட்டியெடுத்தல், அலகு குத்துதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவற்றை செய்கின்றனர் பக்தர்கள்.
மாங்கல்ய பலம் தருவாள் மாரி
கணவனின் ஆயுளில் கண்டம் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு அவதியில் இருந்தாலும் தாலி வரம் கேட்டு இங்கு வந்து அம்மனை வேண்டினால் தாயாக இருந்து மாங்கல்ய பலத்தை அளிப்பவாளக விளங்குகிறாள் இந்த நித்திய சுமங்கலி மாரியம்மன். அம்மை, அக்கி, காய்ச்சல் போன்ற வெப்பத்தால் ஏற்படுகின்ற நோய்களை போக்கி மக்களை காத்து அருளும் இந்த மாரியம்மனை நாமும் சென்று தரிசித்து நோய் பிணிகள் நீங்க பிராத்தனை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *