• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு இடைத்தேர்தல்…,
பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த மத்திய படை வீரர்கள்..!

Byவிஷா

Feb 11, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகின்றனர். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.
கடந்த 07ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் ூ நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 180 வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். இவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.