மதுரையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி, முதன் முறையாக தென்மாவட்டங்களுக்கு வருகிறார். அதற்காக அவர் இன்று(வியாழக்கிழமை) காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கு அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.
இந்த வரவேற்புக்கு பின், எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சிவகாசி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்சை விட தங்களுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்பதை காட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக மதுரை நகர் முழுவதும் சொகுசு பஸ் ஒன்றை உலாவிட்டுள்ளனர். அதில்” மதுரையில் எடப்பாடியார்,கழக பொதுச்செயலாளரே வருக..வருக..”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.