காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபைத்தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அப்பாவு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், * “ஜீரோ ஹவரில் பேச அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் காவலர் கொலை தொடர்பாக பேச அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை சுதந்திரமாக நடக்கிறது. காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினர் இனியாவது காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்.
மக்களின் பிரச்சனைகளை பேச எங்களை அனுமதிக்கவில்லை. துணை முதலமைச்சர் பேசும்போது இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக எங்களை திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. மக்களுக்காக தான் சட்டமன்றம். சட்டமன்றத்திற்காக மக்கள் அல்ல. இன்றைய தினம் ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்கை சட்டமன்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார்கள்” என்றார்.