• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இபிஎப்ஓ நிறுவனத்தில் நடப்பாண்டில் அதிக உறுப்பினர் சேர்க்கை

Byவிஷா

Sep 24, 2025

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நடப்பாண்டு ஜுலையில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும்போது, நிகர சம்பளப் பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் தொடர் முயற்சிகள், வலுவான கூடுதல் வேலை வாய்ப்புகள் மற்றும் பணியாளர் நலன் குறித்த விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்துள்ளது.
2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ள சம்பளப் பட்டியலில் உள்ள தரவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் வருமாறு:
நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் 9.79 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பளப் பட்டியலில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்தப் பிரிவில் 5.98 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது 2025 ஜூலையில் சேர்க்கப்பட்ட புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 61.06 சதவீதம் ஆகும்.
சம்பள பகுப்பாய்வு பட்டியலில் முன்னிலையில் உள்ள 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 60.85 சதவீத புதிய உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பை கொண்டுள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலம் 20.47 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பை பெற்று முன்னணியில் உள்ளது. கர்நாடகா, தமிழகம், குஜராத், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 5 சதவீதத்துக்கும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.