• Sat. Mar 22nd, 2025

இலக்கியம்:

Byவிஷா

Jun 24, 2023

நற்றிணைப் பாடல்192:

‘குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை,

நீ நயந்து வருதல் எவன்?’ எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்

ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.


திணை: குறிஞ்சி

பொருள்:

இரத்தத்தை யுண்ணும் விருப்பத்தொடு அச்சத்தைச் செய்யும் வலிய புலி தன் எதிரே வலிமிக்க பெரிய இளைய களிற்றியானை வருதலை நோக்காநிற்கும்; மரங்கள் பொருந்திய சோலை நிரம்பப் பூழியருடைய நல்ல நிறத்தையுடைய யாட்டு மந்தைபோல மாரிக் காலத்து வைகறைப் பொழுதில் மேய்கின்ற கரடிகளையுடைய; மலைச்சுரத்து நீண்ட நெறியில் நீ என்னை விரும்பி வருதல் என்னை கொல்? என; பலவாகப் புலந்துகூறிக் கலுழந்துகொண்டிராநின்ற அழகிய மாமை நிறத்தினையுடைய மடந்தாய்!; பயன் மிக்க பலா மரங்களையுடைய கொல்லிமலையினுள் மேல் பாலாக முன்பு தெய்வத்தாலே செய்துவைக்கப்பட்ட புதுவதான நடைகொண்டு இயங்குகின்ற பாவை; விரிந்த ஞாயிற்றின் இளவெயிலிலே தோன்றி நின்றாலொத்த நினது அழகிய நலத்தைக் கருதி வருங்காலத்து நின்மேனி யொளியே எங்கும் பரவி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே; இம்மலையடியிலுள்ள நெறியானது எமக்குக் காவலையுடையதாகும் கண்டாய்; ஆதலின்; நீ அழுதுறைவதை விட்டொழிப்பாயாக!