• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருநாகேஸ்வரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Byவிஷா

Apr 10, 2024

கும்பகோணம் வட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இருக்கும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல்மேட்டுத் தெரு, தோப்புத்தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் உள்ள 3,000 குடியிருப்புகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரிகள் செலுத்தி, மின் இணைப்புகள், ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வசித்து வருகின்றனர்.
தாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக அனைத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கியும், பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், அரசு பதிவேட்டில் ஏற்பட்ட தவற்றை சரி செய்து எங்களுக்குப் பட்டா வழங்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நேற்று இரவு, அந்தத் தெருக்கள் முழுவதும் கருப்புக் கொடி கட்டி, வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இன்று (ஏப்.10) காலை முதல் அந்தத் தெருக்களில் உள்ளவர்கள், தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாயில் கருப்புக் கொடி கட்டிக்கொண்டு அமைதியாக தங்களது வீட்டின் வாசலில் அமர்ந்து மவுன போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.