• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 29, 2023

நற்றிணைப் பாடல் 148:

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்
அருஞ் சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே

பாடியவர்: கள்ளம்பாளனார்
திணை: பாலை

பொருள்:

உன் அழகை எண்ணிப் பார்த்தார். மென்மையாக உனக்கு எடுத்துரைத்தார். “நான் செல்லும் காட்டுக்கு நீ வந்தால் தாங்கமாட்டாய்” என்றார். பின்னர், தான் மட்டும் பொருளீட்டி வரும் முயற்சியில் ஈடுபட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற இடத்தில் குளத்தில் நீர் இருக்காது. சிவந்த அடிமரம் கொண்ட மரா மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் மறவர் அம்பு எய்து தாக்குவர். அதனைக் கண்டு அஞ்சாமல் செல்லவேண்டும். கல்லுக் குகையில் பெண்புலி குட்டிப் போட்டிருக்கும். அதன் பசியைப் போக்க அதன் ஆண்புலி அண்ணாந்த தந்தம் கொண்ட யானையைத் தாக்கும். அப்படிப்பட்ட காட்டில் அவர் செல்வார் என்று கூறுகின்றனர். அதற்காக நான் வருந்தவில்லை. அவர் செயல் வெற்றி பெறுவதாகுக. – இவ்வாறு தோழி தலைவியிடம் கூறினாள்.