தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து, அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்வதற்கு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்பிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, எடைக்குறைவு இருப்பின் அதனை சரிசெய்வதற்காக சத்துணவு, சத்துமாவு உள்ளிட்ட உணவுப்பொருள் வழங்கப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ச்சியாக அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், கல்வி உதவித்தொகைகளும் அரசால் வழங்கப்படுகிறது. கல்வி இடைநிற்றல் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் முறையாக உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
குறிப்பாக, குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே, பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனால், குறைவான எடையில் குழந்தை பிறத்தல், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகளை தவிர்க்கலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் இளம்வயது திருமணம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கருநாக்கமுத்தன்பட்டியில் 14 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும் மற்றும் கட்டுமான பணிகள் நிறைவுற்ற கலைஞரின் கனவு இல்ல வீட்டிற்கான ஆணைகளை 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் தலா ரூ.2538/- மதிப்பிலான மண்புழு உரபடுகை 2 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.26,000/- மானிய விலையில் கத்தரி நாற்றங்கால் மற்றும் மிளகாய் நாற்றங்கால் 2 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக, இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுகாதாரப்பணிகள், வேளாண்மை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், இணை இயக்குநர்கள் சாந்தாமணி (வேளாண்மைத்துறை), கலைச்செல்வி (சுகாதாரப்பணிகள்), உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, துணை இயக்குநர்கள் நிர்மலா(தோட்டக்கலை), மரு.ராமலிங்கம் (கால்நடை பராமரிப்புத்துறை), உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) முருகையா, மோகன்ராஜ் (மாவட்ட தொழில் மையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வளர்மதி (விவசாயம்), அண்ணாதுரை (சத்துணவு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சம்பூர்ணம், தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனி, ஜெயபிரகாசம், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.