

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த கூட்டணி கட்சி என்ற ரீதியில் பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை.
பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதை கோர்ட்டும் அங்கீகரித்து உள்ளது. அதேபோல் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதையும் சுப்ரீம் கோர்ட்டு சரி என்று அறிவித்துவிட்டது. கட்சி உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்று அவரது மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. அமித்ஷாவை சந்தித்து பேசிய போது இந்த தகவல்களையும், கோர்ட்டு தீர்ப்பு நகல்களையும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.
மொத்தம் உள்ள 1660 பொதுக்குழு உறுப்பினர்களில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தன்னை ஆதரித்து கையெழுத்து போட்டு கொடுத்த கடித நகல்களையும் அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார். டெல்லி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலை 6.15 மணிக்கு டெல்லியில் இருந்து கோவை செல்கிறார்.24-ந் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
