• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது இடையூறு செய்கிறார் : சபாநாயகர் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

ByP.Kavitha Kumar

Mar 17, 2025

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவசரப்படுவது ஏன்? யாருடைய கட்டளையின்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அவர் இடையூறு செய்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகின்றறது.

இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. ஆனால் அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிவருகின்றனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பேரவைத்தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்; சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர் அவசரப்படுத்துகிறார் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அப்பாவு அவசரப்படுவது ஏன்?. யாருடைய கட்டளையின்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது பேரவைத்தலைவர் இடையூறு செய்கிறார்?. ஆளுங்கட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக பேரவைத்தலைவர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. கடந்த 4 ஆண்டுகளில் சட்டப்பேரவை 400 நாட்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 116 நாட்கள் மட்டும் நடத்தியது ஏன்?. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரான நான் பேசும் போது நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்?. நான் முதலமைச்சராக இருந்தபோது சில திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எனது இருக்கையில் ஏறி நடனமாடினார்கள். நாங்கள் வெளிநடப்பு செய்தால், பேரவைத்தலைவர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். கிண்டல் செய்கிறார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.