• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Byகாயத்ரி

Jan 5, 2022

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழ்நாடு சட்டசபை கூடும்போது ஆளுநர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அம்மா கிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்பு செய்த பின்னர் வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதல்வர் கவனம் செலுத்தவில்லை. பெண்கள், பொதுமக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது.பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2,500-ஐ அம்மா அரசு வழங்கியது. பொங்கல் பரிசு அளிக்காதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. பொங்கல் பரிசு தொகையை கூட மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை.

திமுக அரசு சரியாக செயல்படாததால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது; திமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கு எந்த நிவாரணத் தொகையையும் வழங்க வில்லை.” என்று கூறினார்.