• Fri. May 10th, 2024

கர்நாடகாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பணமோசடி வழக்கில் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பாலவளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும் அவரது நண்பர்களும் பாலவளத்துறை மற்றும் மற்ற அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரைத்தொடர்ந்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கையும் கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தார்.


இந்நிலையில் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜி கோரிய முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி அவரை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடுதல் பணி நடந்து வந்தது. அவரது உறவினர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


உச்சநீதிமன்றத்தில் நாளை முன்ஜாமீன் குறித்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று அதிரடிப்படை போலீசார் காரிள் தப்பி செல்ல முயன்ற ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *