• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் எடப்பாடி பழனிச்சாமி..!

Byவிஷா

Oct 28, 2023

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) திடீரென மாரடைப்பால் கடந்த 19-ஆம் தேதி காலமானார்.
மறைந்த பங்காரு அடிகளார் சேவையை போற்றும் வகையில் கடந்த 20-ஆம் தேதி மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, மறைந்த பங்காரு அடிகளார் நினைவிடத்துக்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் (சமாதி) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன்பின், பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார். பங்காரு அடிகளார் மறைவின்போது அதிமுக சார்பில் சிவி சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, பங்காரு அடிகளார் மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவில், ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும் என அறிக்கை மூலம் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.