தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல்படை உதவுடன் அந்தக் கப்பலை நடுக்கடலில் அதிகாரிகள் வழிமறித்தனர். அத்துடன் அந்த கப்பலை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு வந்து சோதனை நடத்திய போது அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில் கப்பலில் ஹசீஸ் எனப்படம் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த கடத்தல் விவகாரத்தில் துறைமுக ஊழியர் ஒருவருககும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடுக்கடலில் பிடிபட்ட கப்பலில் இருந்து 80கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியுள்ளது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.