புதுச்சேரி பாரதி அறக்கட்டளை, சார்பில் சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு “போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் கம்பன் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்டது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்று சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் சென்றார்.

சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடை பயணமானது போதைப்பொருள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு அண்ணா சாலை, காந்தி வீதி, ரயில் நிலையம் வழியாக சென்று கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்…
புதுச்சேரியில் போதைப்பொருள் சம்பந்தமாக ரகசிய சர்வே நடத்தப்பட்டது என்றும் அந்த சர்வேயில் அரசு பள்ளியில் படிக்கும் 23 சதவீத மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்த துணை நிலை ஆளுநர், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.