• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திமுகவின் வெற்றிக்கு இன்று வரை வன்னியர்கள் தான் காரணம் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை

ByP.Kavitha Kumar

Jan 27, 2025

தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே வன்னியர்கள் தான். திமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அக்கட்சியின் வெற்றிக்கு வன்னியர்கள் தான் காரணமாக இருந்து வருகின்றனர் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 ஈகியர்களின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 10.50 சதவீதம் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் வன்னிய மக்களுக்கு மறக்கவும், மன்னிக்கவும் முடியாத துரோகத்தை செய்து விட்டு, அதை மறைப்பதற்காக இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதை சமூகநீதி ஈகியரே ஏற்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1980-ம் ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து பத்தாண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு கட்டமாக 1987செப்டம்பர் 17-ம் நாள் முதல் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் 21 பாட்டாளிகளும் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது. அவர்களின் தியாகத்திற்கு செய்யப்படும் உண்மையான மரியாதை என்பது அவர்கள் எந்த நோக்கத்திற்காக போராடி, உயிர்த்தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது தான். ஆனால், அதை நோக்கி ஓர் சிறிய அடியைக் கூட மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னெடுக்கவில்லை. வன்னியர்களுக்கு தாம் இழைத்து வரும் துரோகத்தை மறைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் திரைச்சீலை தான் மணிமண்டப திறப்பு விழா என்ற நாடகமாகும்.

தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 2022&ஆம் ஆண்டு மார்ச் 31-ம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் இன்றுடன் 1034 நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படவில்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காகவே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றி அமைக்கப்படுவதாக திமுக அரசு கூறியது. வன்னியர் உள் இடஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023 ஜனவரி 12-ம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அதன்பின் 25 மாதங்கள் ஆகியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. சமூகநீதியில் அக்கறை கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் மு.க.ஸ்டாலினும் வன்னியர்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மூன்றாண்டுகளாக நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் மேற்கொள்ளாத முயற்சிகள் எதுவும் இல்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைத் தொடர்ந்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர் 08.04.2022-ம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பாக நான் எழுதிய கடிதத்தையும் முதலமைச்சரிடம் வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 30.04.2023, 10.05.2023, 09.10.2023, 24.11.2024 ஆகிய நாள்களில் முதலமைச்சருக்கு கடிதங்களை எழுதியிருக்கிறேன். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் தங்களை மூன்று முறை சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினார்கள். குறைந்தது 10 முறையாவது முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் நிற்காமல் 28.12.2023-ம் நாள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினேன். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க. வேலு, ஏ.கே. மூர்த்தி , வழக்கறிஞர் க.பாலு உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை முதலமைச்சரின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து, வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், சமூகநீதியில் அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் திமுக அரசு, மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க இதுவரை ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

எப்போதெல்லாம் வன்னியர்கள் இடஒதுக்கீட்டிற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றனவோ, அப்போதெல்லாம் அதை மடைமாற்றம் செய்யும் வகையில் ஏதேனும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது திமுக அரசின் வாடிக்கை ஆகும். அத்தகையதொரு நாடகம் தான் வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் மணிமண்டப திறப்பு விழா ஆகும். சமூகநீதியைக் காப்பதில் அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது. அவர்கள் செய்த தியாகத்திற்கு அரசின் சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படுவது அவசியம் தான். ஆனால், அதை விட முக்கியமானது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான். துப்பாக்கி குண்டுகளை மார்பில் வாங்கிய பிறகும் அவர்களிட்ட வீர முழக்கங்கள் எனது செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. “உயிரைக் கொடுத்தாவது இட ஒதுக்கீட்டைப் பெறுவோம்” என்பது தான் அவர்கள் எழுப்பிய முழக்கங்கள். அவர்களின் உயிரை அதிகார வர்க்கம் பறித்துக் கொண்டது; ஆனால், அவர்கள் கேட்ட இட ஒதுக்கீட்டை மட்டும் இன்று வரை அதிகாரவர்க்கம் வழங்கவில்லை.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக நீதிக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாக மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக் கொண்டிருப்பவர். அவர் கூறுவது உண்மை என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வன்னியர்களுக்கு 30 மாதங்களுக்கு முன்பாகவே இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க முடியும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டமோ, நீதிமன்றங்களோ, வன்னியர்களின் பின்தங்கிய நிலைமை குறித்த புள்ளி விவரங்களோ தடை இல்லை. மாறாக, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை என்பது தான் பெரும் தடையாகும்.

தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே வன்னியர்கள் தான். திமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அக்கட்சியின் வெற்றிக்கு வன்னியர்கள் தான் காரணமாக இருந்து வருகின்றனர். ஆனால், அதற்கான நன்றியுணர்வு கொஞ்சமும் இல்லாமல், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வன்னியர்கள் கல்வியறிவோ, வேலைவாய்ப்போ பெற்று முன்னேறிவிடக் கூடாது; வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு அடிமையாகி திமுகவுக்கு வாக்களிக்கும் எந்திரங்களாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி கருதுகிறது. வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க மு.க.ஸ்டாலின் அரசு மறுப்பதற்கு இதுதான் முதன்மைக் காரணமாகும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், சமூகநீதி கோட்பாட்டின்படியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதி. அதுதான் இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு செய்யப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும். அதைவிடுத்து, அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் மணி மண்டபத்தை மட்டும் திறப்பது நாடகமாகத்தான் இருக்கும். இதை அவர்களின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான அறிவிப்பை விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள இடஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை உடனடியாக பெற்று விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.