• Wed. May 8th, 2024

மீம்ஸ் போடாதீங்க உயிரை விடாதீங்க

ByKalamegam Viswanathan

Jan 1, 2024

சோழவந்தான் அருகே ஆபத்தான தடுப்பணையில் குளிப்பதால் நீரில் மூழ்கி தொடர்ச்சியாக உயிரை விடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.
தடுப்பணையில் குளிப்பவர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுவதன் மூலம் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளிக்க வருவதாகவும் ஆகையால் தடுப்பணையில் குளிப்பதற்கு தடை விதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்குட்பட்ட சித்தாதிபுரம் கிராமம் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது இதன் இயற்கை காட்சிகளை யூடியூப் வாட்ஸ் அப் பேஸ்புக் மூலம் இப்பகுதி இளைஞர்கள் வெளியிட்டு வந்தனர். இதை பார்த்து மதுரை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இங்கு வந்து ஆனந்தமாய் குளித்து சென்றனர். மேலும் அவ்வாறு குளித்து செல்பவர்கள் செல்பி மூலம் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் மீம்ஸ் போட்டு இயற்கையான தடுப்பணை பகுதிகளில் குளிப்பது போன்ற படங்களை பதிவிடுவதும் வாடிக்கையாக நடைபெற்று வந்தது. இதைப் பார்த்து மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் விடுமுறை காலங்களில் இந்த பகுதிக்கு படையெடுத்து வந்தனர். அதில் ஒரு சிலர் வீட்டிற்கு தெரியாமல் இங்கு வந்து குளித்து தங்களின் பொழுதை கழித்து சென்றனர். இவ்வாறு குளிக்க வரும் மாணவர்கள் இளைஞர்கள் இந்த தடுப்பணையில் ஆழமான பகுதிக்குள் சென்று குளிப்பதும் அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம்
மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்ரமணன் என்பவரின் மகன் யாதேஷ்தினகரன்17. மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். டியூசன் சென்ற இவர் வீடு திரும்பவில்லை என கார்த்திக் ரமணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் யாதேஷ் தினகரனின் நண்பரான விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஜாசன்ஆஸ்ட்ரிக்கும் காணாமல் போனது தெரியவந்து அது குறித்தும் புகார் எழுந்த நிலையில் போலீசார் இவர்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து பார்த்தபோது அது சோழவந்தான் அருகே குருவித்துறை சித்தாதிபுரம்வைகை ஆற்றில் தடுப்பணையில் காண்பித்தது. தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது இருவரின் காலணிகள், பேக் உள்ளிட்டவைகள் கிடந்தது. இதனால் தண்ணீரில் குளிக்கும் போது மாயமானார்களா அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் வைகை ஆற்றில் இறங்கி தேடுதலில் இறங்கினர் இதில் மாயமான இரண்டு மாணவர்களுடைய உடல்களை பிணமாக மீட்டனர் இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் சித்தாதிபுரம் தடுப்பணையானது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை போடு வைக்க வேண்டும் எனவும் முக்கியமாக பொதுமக்களை தடுப்பணை பகுதிக்கு அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர். குறிப்பாக இந்தப் பகுதியில் குளிக்கும் இளைஞர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தில் குளிக்க வந்து நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறப்பதாகவும் ஆகையால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள இந்த தடுப்பணையில் குளிப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டுமென பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் தினசரி பாதுகாப்பிற்காக காவலர்களை இங்கே பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *