• Sat. Oct 12th, 2024

முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிவர வேண்டாம் – அமைச்சர்

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் சீராமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கோடை வெயில் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோடைகாலம் முடியும் வரை மக்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்து செல்வது நல்லது. தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். கோடையில் வெளியே செல்லும் போது முடிந்தவரை, எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள் என்று அறிவுறுத்தல் வழங்கினார்.

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெயிலில் பயணிக்கும்போது தலையில் துண்டு, தொப்பி, துணி உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு தலையை மறைத்து செல்வது என்பது நல்லது. கால்களில் செருப்பு இல்லாமல் செல்வதை தவிர்க்கவேண்டும். காற்றோட்ட வீடுகளில் தங்கியிருப்பது அவசியம். தேநீர், காப்பி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து வைத்துள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் எனவும் கூறினார். புரத சத்து அதிக உள்ள உணவுகளை தவிர்த்து பழைய உணவுகளை உட்கொள்ள கூடாது. வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது குழந்தைகளை ஏற்ற கூடாது. கோடை வெப்பத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. எதாவது உடல் பாதிப்பு என்றால் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும் என கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்து அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *