• Sun. May 5th, 2024

ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி

Byவிஷா

Apr 24, 2024

நெல்லை மாநகராட்சியில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் தன்னுடைய தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறி திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவந்தனர். திமுக தலைமையின் தலையீட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால், மேயரின் பதவி தப்பியது.
இந்நிலையில், கடந்த மார்ச் தொடக்கத்தில் மாநகராட்சி 7-வதுவார்டு திமுக கவுன்சிலர் இந்திராமணி, தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தார். தனது வார்டில் எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை என்பதால், மக்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ராஜினாமா கடிதத்தை மேயரிடம்தான் அளிக்க வேண்டும் என்று ஆணையர் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநகராட்சிப் பிரச்சினை ஓய்ந்திருந்தது. தற்போது தேர்தல் முடிந்தநிலையில், மீண்டும் பிரச்சினை தொடங்கியுள்ளது. மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து, அதற்கான கடிதத்துடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தக் கடிதத்தில், “எனது வார்டில் கோரிப்பள்ளம், பெரியார் நகர் பகுதிகளுக்கு பாளையங்கோட்டை சரோஜினி நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பிற சாதிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுடன், மாநகராட்சி அதிகாரி சேர்ந்து கொண்டு, என்னைப் பழிவாங்கும் நோக்கில், தண்ணீர் விநியோக நடைமுறையை மாற்றியதால், எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள், கட்சியினரிடம் எடுத்துக் கூறியும் பிரச்சினையை நிவர்த்தி செய்யவில்லை. வார்டு தொடர்பாக எந்த பணி குறித்து அதிகாரிகளிடம் பேசினாலும், சாதியை மையமாகக்கொண்டு, அதை கண்டுகொள்வதில்லை. குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி, தூய்மைப் பணி, மின்விளக்கு, கட்டுமானப் பணிகள் எனஅனைத்து பணிகளும் முடங்கிஉள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் சாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் எனது வார்டில் நடந்த பிரச்சாரம் முதல் பல்வேறு நிலைகளில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். எனவே, எனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணனை, பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல்வகாப் தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, சமரசம் செய்தார். பின்னர், ராஜினாமா முடிவைக் கைவிடுவதாக கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *