• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மதுரை மேயருக்கு மருமகளுடன் முட்டிமோதும் திமுக பிரமுகர்கள்

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்.ஏற்கனவே இது குறித்து அரசியல் டுடேவில் மகளா மருமகளா என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது கிட்டதட்ட மருமகளுக்கு உறுதியாகும் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது மருமகளுடனும் முட்டிமோதிக்கொண்டு பிரச்னை கிளம்பி உள்ளது

ரோகிணி, இந்திராணி பொன்வசந்த், விஜய மவுசமி, வாசுகி சசிகுமார், ஆகிய நால்வரில் ஒருவர் மதுரை மேயராக வரக்கூடும் எனத் தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கை ஓங்கும் எனத் தெரிகிறது. மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக சார்பில் வெற்றிபெற்ற பெண் கவுன்சிலர்களில் 4 பேர் அந்த பதவியை கைப்பற்றி காய் நகர்த்தி வருகிறார்கள். திமுக பகுதிச்செயலாளரும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினருமான பொம்மதேவனின் மகள் ரோகிணி மதுரை மேயர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். அரசியலுக்கு புதுவரவான இவருக்கு மேயர் பதவியை பெற்றுக்கொடுக்க அவரது தந்தையும் மதுரை திமுகவின் சீனியர் நிர்வாகியுமான பொம்மதேவன் முயற்சித்து வருகிறார்.

இதேபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் வழக்கறிஞர் பொன் வசந்தின் மனைவி இந்திராணிக்கும் மதுரை மேயராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்பதோடு மக்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையும் இந்திராணி மீது உண்டு. இதனால் அமைச்சர் பி.டி.ஆர். சிபாரிசில் இந்திராணிக்கு மேயர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதனிடையே திமுகவின் மூத்த நிர்வாகியும் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜய் மவுசமியும் மேயர் பதவிக்கான போட்டியில் பிரதான இருக்கிறார். மருமகளை மேயராக பொன்.முத்துராமலிங்கம் இப்போதே அறிவாலயத்தில் காய் நகர்த்த தொடங்கிவிட்டார். இதனால் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டி வலுத்து வருகிறது.

மேற்கண்ட இவர்களோடு வாசுகி சசிகுமார் என்ற திமுக பெண் கவுன்சிலருக்கும் மதுரை மாநகராட்சி மேயராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் உறவினர் என்பதால் வாசுகி சசிகுமாரும் தனது பங்குக்கு மேயர் பதவியை கைப்பற்ற லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் மூர்த்தி, பிடிஆர் என இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் மேயரை தேர்வு செய்யும் விவகாரத்தில் அமைச்சர் பிடிஆரின் கையே ஓங்கும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே மதுரையை நகர்புறத்தை பொறுத்தவரை பிடிஆர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர் நியமனம் , மாநகராட்சி ஆணையர் நியமனம் என தனக்கு நெருக்கமான வட்டாரத்தினரை தனது கைக்குள் வைத்துள்ளார். அதன் படியே திமுகவிற்கும் கணிசமான வாக்குகளை பெற்று தந்துள்ளார்.
இதன் காரணமாகவே திமுக தலைமை தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து விலக சொல்லும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் பிடிஆர் ராஜினாமா செய்தார். மதுரையின் இந்த குடும்ப பாரம்பரிய காரணமாகவே மதுரை திமுகவை பொறுத்தமட்டில் பிடிஆர் கை ஓங்கி உள்ளது.

மதுரையை பொறுத்த வரை மீனாட்சி ஆட்சி தான் ஆனால் அது பொன்.முத்துராம லிங்கம் வீட்டில் இருந்தா அல்லது பிடிஆர் கை நீட்டும் பெண் வீட்டிலிருந்தா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்திராணி பொன் வசந்த்
ரோகிணி