• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

ByP.Kavitha Kumar

Mar 8, 2025

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

வரும் 2026-ம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென் மாநில எம்.பிக்கள் கூட்டுக்குழு அமைக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதையடுத்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக சார்பில் மார்ச் 12-ம் தேதி “தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிரான பொதுக்கூட்டங்கள் அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்கள் சார்பிலும் நடைபெறும்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாகவும், முன்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரியவைக்கும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார். திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.