• Thu. May 2nd, 2024

அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேச்சு

ByG.Ranjan

Apr 10, 2024

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின் அருப்புக்கோட்டைக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிந்து விடுமோ என நினைத்தேன். ஆனால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தற்போது வேட்பாளராக உங்களிடம் நிற்பது சந்தோஷமாக உள்ளது என அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.‌ அருப்புக்கோட்டை நகர பகுதிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்த விஜய பிரபாகரனுக்கு பெண்கள் ஆரத்தி அடைந்தும் மலர்‌ தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.‌ அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணியாக சென்று, காந்திநகர், வெள்ளகோட்டை, சுப்புராஜ் நகர், கல்பாலம், ராமசாமிபுரம், எம் எஸ் கார்னர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது பேசிய விஜய பிரபாகரன்..,

அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் தான் எனது தாத்தாவும் கேப்டன் விஜயகாந்தும் பிறந்தனர். கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின் அருப்புக்கோட்டைக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிந்து விட்டது என நினைத்தேன். ஆனால் தற்போது இங்கு உங்கள் முன்பு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக நிற்பதில் சந்தோஷமாக உள்ளது. நான் பாராளுமன்ற தொகுதியில் எம்பி-யாக வெற்றி பெற்றவுடன் இங்கேயே வீடு எடுத்து தங்கி உங்களுக்காக பணி புரிவேன். அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது அதை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

மேலும், விசைத்தறி தொழில் அதிகம் உள்ள அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன்.‌ நீங்கள் அனைவரும் என் சொந்த பந்தங்கள் தான்.‌ நீங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு கொட்டுமுரசு சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். வெயில் அதிகமாக உள்ளது. தண்ணீர் அதிகமாக குடியுங்கள். தர்பூசணி பழம் சாப்பிடுங்கள். மீண்டும் வெற்றி விழாவில் சந்திக்கிறேன் என கூறி வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *