• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் – வரவு ரூ.119 கோடி, செலவு ரூ.114 கோடி:

ByN.Ravi

Mar 6, 2024

திண்டுக்கல் மாநகராட்சிக்கு, ரூ.119 கோடிக்கு நிதி வரவுடன், ரூ.5.24 கோடிக்கான உபரி நிதி கிடைக்கும் வகையிலான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சியின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகராட்சி மேயா் ஜோ. இளமதி தலைமை வகித்தாா். துணை மேயா் ச.ராசப்பா, ஆணையா் (பொ) பரிதா வாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிதி நிலை அறிக்கையில், வருவாய் நிதி மூலம் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.89.81 கோடி, குடிநீா், வடிகால் நிதி மூலம் ரூ.19.24 கோடி, தொடக்கக் கல்வி நிதியாக ரூ.10.54 கோடி என மொத்தம் ரூ.119.59 கோடி நிதி ஆதாரம் கிடைக்கும் எனத் தெரிவிக்
கப்பட்டது. இதேபோல, செலவின வகையில் வருவாய் நிதியில் ரூ.89.42 கோடி, குடிநீா், வடிகால் நிதியில் ரூ.18.98 கோடி, தொடக்கக் கல்வி நிதியில் ரூ.5.95 கோடி என, மொத்தம் ரூ.114.35 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ரூ.5.24 கோடி உபரி நிதி கிடைக்கும் வகையில், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எதிா்பாா்க்கப்படும் நிதி ரூ.196 கோடி: 2024-25-ஆம் ஆண்டில் வருவாய், மூலதன நிதியின் நகா்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டம், மூலதன மானியம், மேம்பாட்டுப் பணி ஆகியவற்றின் கீழ் சாலை அமைக்கவும், புதிய வடிகால் அமைக்கவும் ரூ.25 கோடியும், பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கல்வி நிதி மூலம் ரூ.5 கோடி, புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், புதிய குடிநீா் திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூ.166 கோடி என, மொத்தம் ரூ.196 கோடி நிதி அரசிடமிருந்து விடுவிக்கப்படும் என, எதிா்பாா்ப்பதாக நிதி நிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.
கூட்டம் தொடங்கியதும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மாறாக, வழக்கம் போல தீா்மானங்களை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்றன. அப்போது, நடைபெற்ற விவாதம் வருமாறு: நிதி ஒதுக்கியும் பணிகள் நடைபெறவில்லை: விவேகானந்தர் நகா் பகுதியில் சரியான திட்டமிடுதல் இல்லாததால், புதைச் சாக்கடை கழிவுகள், கழிவுநீா் கால்வாய்களில் 8 இடங்களில் வெளியேறி வருகிறது. 13, 14, 15, 16, 17, 18-ஆவது வாா்டுகளிலிருந்து வெளியேறும் இந்தக் கழிவுகளால், விவேகானந்தர் நகா் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்தப் பணிகளை சீரமைக்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்தும், 2 மாதங்களாகப் பணிகள் நடைபெறவில்லை என மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் தெரிவித்தாா். இதற்குப் பதில் அளித்த மேயா், இளமதி நிதி ஒதுக்கீடு செய்ததுபோல, விரைவிலேயே பணிகளை முடித்துத் தருவதாக உறுதி அளித்தாா். நாய் கடியால் 720 பேர் பாதிப்பு: மாநகராட்சிப் பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த ஓராண்டில் மட்டும் 501 நாய்கள் கடித்து, 720 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். 4 ஆயிரம் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. மாநகராட்சி நிா்வாகம் கண்துடைப்பு நடவடிக்கையாக 40 மாடுகளை மட்டுமே பிடித்திருக்கிறது. நாய்கள், மாடுகளால் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்படுவதாக மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு குற்றஞ்சாட்டினாா். இதற்குப் பதில் அளித்த மாநகர நல அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான (பொ) பரிதாவாணி சுமாா் 2 ஆயிரம் தெரு நாய்களுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். துப்புரவுப் பணிகளில் தொய்வு: வெளி முகமை மூலம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட குறைான பணியாளா்களை மட்டுமே நியமித்து வருகிறது. ரூ.1.10 கோடி ஒதுக்கீடு செய்தும், மாநகராட்சிப் பகுதியில் முறையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என மாமன்ற உறுப்பினா் கணேசன் புகாா் தெரிவித்தாா். இதேபோல, 3-ஆவது வாா்டு பகுதியில் பல மாதங்களாக கொசு மருந்து அடிக்கவில்லை என்றும், கழிவுநீா் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால், பாம்புகள் அதிகமாக இருப்பதாகவும், 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் நடைபெறுவதாகவும் மாமன்ற உறுப்பினா் இந்திராணி குற்றஞ்சாட்டினாா். இதற்குப் பதில் அளித்த மாநகா் நல அலுவலா் பரிதாவாணி, தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 3-ஆவது வாா்டுக்கு நிரந்தர துப்புரவு ஆய்வாளரை நியமிக்கவும், குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். மாநகராட்சிக்கு ரூ.5.40 கோடி இழப்பு: திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகள் தொடா்ந்து பூட்டப்பட்டிருப்பதால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.5.40 கோடி இழப்பு ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து, கடைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு வலியுறுத்தினாா். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை மேயா் ராசப்பா தெரிவித்தாா். பெட்டிச் செய்தி… நிதி நிலை அறிக்கையை மறந்த மேயா்: மாநகராட்சிக் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் இயல்பு கூட்டத் தீா்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. பிற்பகல் 1.15 மணி வரை விவாதம் நடைபெற்றபோதிலும், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனிடையே, சில மாமன்ற உறுப்பினா்கள் கூட்ட அரங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றனா். கூட்டம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன், நிதி நிலை அறிக்கை குறித்து மேயருக்கு நினைவுப்படுத்தினாா். இதன் பின்னரே நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றிருந்த வருவாய், செலவினம் உள்ளிட்ட விவரங்களை மேயா் இளமதி வாசித்தாா். கூட்டமும் நிறைவடைந்தது.